Saturday, July 10, 2010

CHAMBER OF PRINCES என அழைக்கப்பட்ட இந்திய பாராளுமன்றம

கே. அசோக்குமார் ...-
இந்திய பாராளுமன்ற கட்டட வளவில் அமைந்துள்ள நூலக கட்டடத் தொகுதியில் அமைந்திருக்கும் பாராளுமன்ற கற்கைகள், பயிற்சி நெறிக்கான பணியகத்தில் இலங்கையிலிருந்து சென்ற பாராளுமன்ற ஊடகவியலாளர் குழுவுக்கு முழுநாள் செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
செலியூலர் தொலைபேசிகள், கமராக்கள் போன்ற எந்தவிதமான இலக்ரோனிக் உபகரணங்களும் உள்ளே கொண்டு செல்ல முடியாது. பலத்த சோதனையின் பின் உள்ளே சென்றோம். எமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டு மண்டபத்தினுள் அழைத்துச் செல்லப்பட்டோம். மக்களவை (லோக் சபா) செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் ஆர். எல். ஷாலி எம்மை வரவேற்று எம்மைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்
இந்திய பாராளுமன்ற அமர்வுகளை எவ்வாறு ஊடகங்கள் மக்களுக்கு அறிவிக்கின்றன? அதற்கான வழிவகைகள் என்ன? என்பன போன்ற பல்வேறு தகவல்களையும் விளக்கங்களையும் லோக் சபா செயலகத்தின் இணைச் செயலாளர் பீ. கே. மிஸ்ரா எம்மிடம் தந்தார், விவரித்தார்.
இந்திய பாராளுமன்றத்தின் லோக் சபா செயலகமாகவும் பாராளுமன்ற நூலகமாகவும் மாநாட்டு மண்டபங்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு அறை, நூலக கட்டடமாகவும் இக்கட்டடம் அமைந்திருக்கிறது
அதிநவீன தொழில் நுட்பமும், பழைமையையும் ஒன்றிணைத்த சுமார் 10 ஏக்கர் விஸ்தீரணத்தில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 50,000 சதுர அடிகொண்டதாக முழு கட்டடமும் மூன்று மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நூலகத்தில் நிலக்கீழ் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
நாம் அமர்ந்திருந்த பகுதி (Committee Room C - Ground Floor என குறப்பிடப்பட்டிருந்தது. இதே கட்டடத்திலேயே லோக் சபா ஸ்டூடியோக்களும் அமைந்திருந்தன.
பாராளுமன்ற கற்கைகள், பயிற்சி நெறிகளுக்கான பணியகம்
புதிதாக நியமனம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள், சிறப்புரிமைகள் போன்ற முக்கிய விடயங்கள் குறித்த செயலமர்வுகள் எமது நாட்டிலும் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மக்களவை, மாநிலங்களவை சட்டமன்ற உறுப்பினர்கள், எல்லோருக்குமாக பயிற்சிகளையும், கற்கைகளையும் இந்த பணியகம் வழங்குகிறது.
குறிப்பாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சட்ட சபை உறுப்பினர்களுக்கும் இதே போன்று விசேட பயிற்சிகளை வழங்குகிறது. இவை அனைத்தும் இலவசமே.
இலங்கையிலிருந்தும் எமது பாராளுமன்றத்தில் உதவி சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் இருவரும் பயிற்சிகளை பெற்றுத் திரும்பியதாக தெரிவித்தனர்.
மக்களவை (லோக் சபா)யின் செயலகத்தின் ஒரு பிரிவாக 1976 ஆம் ஆண்டிலேயே மேற்படி பணியகம் உருவாக்கப்பட்டது.
இப்பணியகத்தில் இரண்டு பிரதான பயிற்சி மற்றும் கற்கை நெறிகள் உள்ளன.
‘பாராளுமன்ற உள்ளக பயிற்சி செயற்திட்டம்’ என்றும் சட்டவாக்க வரைபுகள் குறித்த சர்வதேச பயிற்சித் திட்டம் என்ற இரு பயிற்சித் திட்டமும் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விரிவுரைகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், விவாதங்கள், தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் என்பவற்றையும் தொடர்ந்தும் இந்த பணியகம் நடத்திவருகிறது.
இந்தப் பணியகத்தின் கெளரவ ஆலோசகராக திருமதி மார்கிரட் அல்வா என்ற பழுத்த அரசியல்வாதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பணியகத்தின் நடைமுறைகள் மட்டுமல்லாது இந்திய அரசியலமைப்பு, பாராளுமன்ற நடைமுறைகள் குறித்தும் எமக்கு விளக்கமளித்தார்.
இந்திய பாராளுமன்றத்தின் விசேட விருந்தினர் உணவு அறையில் திருமதி மார்கிரட் அல்வாவுடன் எமது குழுவினருக்கு பகல் உணவு அளிக்கப்பட்டது.
திருமதி மார்கிரட் அல்வ
தற்போது உத்தர காண்ட் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முதலாவது பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெறுகிறார். இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் இருந்த இவர் 1942 ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்தார்.
2009 ஜூலை 29 ஆம் திகதி உத்தரகாண்ட் மாநில ஆளுனராக திருமதி சோனியா காந்தி நியமித்தார். தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான இவர் மேற்படி பணியகத்தின் கெளரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே அவரை சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
பாராளுமன்ற நூலகம
மதிய உணவு வேளையின் பின்னர் பாராளுமன்ற நூலகத்தை சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
நூலகத்தின் கட்டடப் பகுதி பல பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. செய்திப் பத்திரிகைகளுக்கென தனியான பிரிவு இருக்கிறது. எமது லேக்ஹவுஸ் நிறுவனத்திலிருந்து வெளிவரும் எமது சகோதர பத்திரிகையான டெய்லிநியூஸ் பத்திரிகை உட்பட எந்தவொரு நாட்டில் பிரசுரமாகும் பத்திரிகையையும் இங்கு காணலாம். எங்கும் மிக அமைதியான சூழல், நூலகத்தின் உள்ளே வெளிச்சத்திற்காக மின் விளக்குகள் இல்லை. இயற்கை வெளிச்சம் உள்ளே பரவும் அளவுக்கு இக்கட்டத்தின் கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பமும், இந்திய பாரம்பரிய கட்டடக் கலையும் ஒருங்கிணைந்து காணப்படும் கட்டடம் இது. மகாத்மா காந்தியின் நூல்களுக்கென தனியான அறை. இதில் அவரைப் பற்றிய சகல தகவல்களும் உள்ளடக்கப்பட்ட ஆயிரக் கணக்கான நூல்கள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன.
ஜவஹர்லால் நேருவின் நூல்களும் ஒரு தனியான அறையில் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக தனியான நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நூலகத்திலிருந்து வெளியேறிய போது பாராளுமன்றத்தில் மக்களவை அமர்வுகளை நேரடியாக பார்ப்பதற்காக எம்மை அழைத்துச் செல்ல பிரதிநிதி ஒருவர் வந்திருந்தார்.
மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரையில் பார்வையாளர் கலரியில் அமர்ந்து பார்க்க முடியும் என எமக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அனுமதி அட்டையையும் பையில் உள்ள பணத்தையும் தவிர வேறு எதனையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
இந்தியப் பாராளுமன்றம
பாராளுமன்ற கட்டடத்தினுள் நுழைந்த வேளையிலிருந்து லோக்சபா பார்வையாளர் கலரிக்குள் நுழையும் வரை சுமார் 5 - 6 இடங்களில் தீவிர பரிசோதனைகள் நடக்கின்றன. பழைமையும் சரித்திர முக்கியத்துவமும் மிக்க இக் கட்டடத்தை வெறும் கட்டடமாக கருதாமம் இங்குள்ளவர்கள் இதை இந்திய ஜனநாயகத்தின் உச்ச ஸ்தானமாகவும் ஒரு கோவிலைப் போன்ற புனிதமான இடமாகவும் கருதுவதை அவதானித்த போது மெய்சிலிர்த்தது. இதை நாட்டுப் பற்றின் வெளிப்பாடாக நாம் காணலாம்.
இந்தியப் பாராளுமன்றத்தை ஹிந்தியில் ‘சன்சத்பவன்’ என அழைக்கிறார்கள். இந்தக் கட்டடம் வட்டவடிவ அமைப்பில் கட்டடப்பட்டுள்ளது.
சேர். எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சேர். எர்பர்ட் பேக்கர் ஆகிய இருவரே இக்கட்டடத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிரித்தானிய கட்டடக் கலைஞர்களாவர்.
1912- 1913 ஆம் ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு கட்டட வேலகள் 1921 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1927 இல் மாநிலங்கள் அவைக்காகவும், மத்திய சட்டமன்றத்திற்காகவும் அமைக்கப்பட்ட இக் கட்டடம் ஆரம்பத்தில் இளவரசர் கூடம் (CHAMBER OF PRINCES) என அழைக்கப்பட்டது.
144 பளிங்குத் தூண்களால் கட்டடத்தின் வெளிக்கட்டுமானச் சுவர் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் நேரடியாக செல்லலாம். இதன் தோற்றத்தை நான் முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டது போன்று இந்தியா கேட் பகுதியிலிருந்தும் பார்க்க முடியும். (தொடரும

No comments:

Post a Comment