Sunday, August 23, 2009

இந்திய பாராளுமன்றத்துக்கான விஜயம்

புதுடில்லி வியாபாரிகளை சமாளிக்க புதுத் திறமை வேண்டும்
சென்னையில் தியாகராயநகர், பாண்டிபஜார், மண்ணடி போன்ற ஷொப்பிங் இடங்களைப் போன்றவைதான் டில்லியில் அமைந்துள்ள சரோஜினி நகர், பாலிகா பஸார், கொரல்பார் ஆகிய இடங்கள். இங்கே ஏராளமான


பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. பெண்கள் அணிகளைப் பார்த்தால் தலை கிறுகிறுத்துப் போகும். அதே சமயம் விலையைக் கேட்டால் மயக்கமே போட்டு விழுந்துவிடுவீர்கள்.
புதுடில்லிக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏற்கனவே அனுபவம் பெற்ற நண்பர் ஒருவர் புதுடில்லி பற்றிய சில சூத்திரங்களைக் காதில் ஓதி வைத்தார். பொருட்களை வாங்கும் போது அவர்கள் சொல்லும் விலையைக் கொடுத்து விடாதீர்கள். பொருளுடன் சம்பந்தமே இல்லாத ஒரு யானை விலை குதிரை விலையைக் கூறிபேரத்தை ஆரம்பிப்பார்கள். ஏனெனில் உங்கள் உடைநடை பாவனையிலேயே நீங்கள் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் இருந்துவந்த ஏமாளி என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். நீங்கள் ஒரு விலையைக் கூறி
விடாப்பிடியாக நின்றால் அந்த விலைக்கே கொடுத்துவிடுவார்கள். ஆனால் அவர்கள் உயர்மட்ட விலையைக் கூறும் போது நீங்கள் அடிமட்ட விலையைக் குறிப்பிடுங்கள் என்று அவர் ஒரு அற்புதமான விஷயத்தைச் சொல்லி வைத்தார்.
பாலிகா பஸாரில் இது உண்யைமானது. தள்ளிச் செல்லக்கூடிய லக்கேஜ் ஒன்றைப் பார்த்து பரவசப்பட்டு விலை கேட்டேன். 1200 ருபா என்றார் கடைக்கார். நம் கரன்ஸியில் மூவாயிரம் ரூபா வரும். முதலில் விலைகுறை க்க மறுத்தவர். கடுமையான பேரத்தின் பின்னர் படிந்து வந்தார். கடைசியாக 500 ரூபாவுக்கு தரச் சம்மதித்தார்.


சரோஜினி நகர்
பரபரப்பான வீதி
காலணிகளைப் பார்க்கும் போது ஆசைவர, விலை கேட்டேன். ஆயிரத்து எழுநூறு ரூபா என்றார். பேரம் தொடங்கியது. ஒரு கட்டத்தில் வேண்டாம் என்று வெளியே வந்துவிட்டேன். கடைக்காரர் வெளியே வந்து கைகளைப் பிடித்துக் கொண்டார்கள். ஹரோ சஹேப், ஹரே சாஹேப் எனக் கெஞ்சத் தொடங்கினார். இறுதியில் எனக்கு ஏற்ற மாதிரி 300 ரூபாவுக்கு விலை மடிந்தது. ஒரு சன்கிளாஸ் விலை 700 ரூபா. இருவரும் வியாபார சண்டையை உக்கிரமாக நடத்தி முடித்த போது 100 ரூபாவுக்கு அது என் கைக்கு வந்தது. இப்படி எல்லாம் இலங்கையிலோ சென்னையிலோ விலைபேச முடியாது. சும்மா போங்க சார்... கெளம்பு... கெளம்பு என்று சொல்லி விடுவார்கள்.
முகத்தில் அறைந்த மாதிரி. ஆனால் இப்பிராந்தியத்தின் வொஷிங்டன் மாதிரித் திகழும் புதுடில்லியில் இதுவெல்லாம் சாத்தியம். என்ன விலை, என்ன இலாப சத விதம் என்பதெல் லாம் எமக்குப் புரியாத புதிர். நிச்சயமாக அந்த ‘பொளோ ரொய்ட்’ சன்கிளாசை நஷ்டத் துக்கு அவர் தந்திருக்க மாட்டார். 100 ரூபாவிலும் அவருக்கு இலாபம் இருக்கும். அப்படியானால் கொள்விலை என்னவாக இருக்கும்? ஏன் இப்படி ஒரு கொள்ளை விலை அணுகுமுறையை இவ் வியா பாரிகள் கடைபிடிக்கிறார்கள்? புதுடில்லி பண்டிதர்களைப் போலத்தான் இந்த மாதிரி விஷயங்களும் நமக்குப் புரிவதில்லை.
சரி டில்லியில் பத்திரிகை யாளர்களுக்கு என்ன வேலை? எமது வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமதான் எங்களை- பாராளுமன்ற ஊடகவியலாளர்களாக- டில்லிக்கு அனுப்பி வைத்தார்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைச்சருடன் நடத்தப்பட்ட கலந்துரையாட லின் போது பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு சார்க் நாடுகளின் பாராளுமன்ற நடைமுறைகள் விவகாரங்கள் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொண்டுக்க வேண்டும் என்றும் கட்டம் கட்டமாக ஆறு பேர் வீதம் தெரிவு செய்து அனுப்புவது என்ற ஆலோசனையையும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம முன்னெடுத்தார்.
இலங்கையின் பாராளுமன்ற அமைச்சர் முன்வைத்த ஆலோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் 6 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்திய பாராளுமன்றத்தின் அமர்வுகள் மற்றும் பாராளு மன்ற கற்கை நெறிகள், பயிற்சிகளுக்கான பணியகத்தின் செயற்பாடுகள் குறித்து நேரடியாக சென்று அறியும் வாய்ப்பை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகம முதல்முறை யாக ஏற்படுத்திக் கொடுத்தார். பயண ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இதன்படி ஆறுபேர் கொண்ட முதலாவது குழு கடந்த 12ஆம் திகதி புதுடில்லி சென்றது.
12ஆம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில் எம்மை ஏற்றிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் புதுடில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பகுதியில் வைத்து புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்ன மற்றும் திருமதி ஜானகி பர்னாண்டோ ஆகியோர் எம்மை வரவேற்றனர்.
எம்மோடு வந்தவர்களில் இரண்டு பேரைத்தவிர ஏனைய நான்கு பேரும் புதுடில்லிக்கு முதற் தடவையாகவே செல்கின்றவர்களாக இருந்தோம்.
டில்லியில் ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் கோடைகாலமாக இருக்கும். நாம் ஜூலை 12ஆம் திகதி பேய்ச் சேர்ந்ததால் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடனேயே அதிகளவு வெப்பத்தை உணர முடிந்தது. டில்லியில் குளிரும் சரி வெப்பமும் சரி தூக்கலாகத்தான் இருக்கும். கடுங்குளிர் அல்லது கடுங்கோடை!
முதல் முறையாக செல்வதால் புதுடில்லியைப் பற்றி அறிய ஆவலாய் இருந்தோம். டில்லி தேசிய தலைநகரப் பகுதி 1,484 ச.கி.மீ. (573 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதில் 783 ச.கி.மீ. (302 சதுர மைல்) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும் 700 ச.கி.மீ (270 சதுர மைல்) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது. டில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 கி.மீ. (32 மைல்), அகலம் 48.48 கி.மீ. (30 மைல்) இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவை டில்லி முனிசிப்பல் கார்ப்பரே சன் (1,397.3 ச.கி.மீ. அல்லது 540 சதுர மைல்) புதுடில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கி.மீ அல்லது 16 சதுர மைல்) டில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கி.மீ அல்லது 17 சதுர மைல்) என்பனவாகும்.
டில்லி வட இந்தியாவில் கிழக்கில் உத்தரபிரதேசத்தையும், மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் ஹரியானாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. டில்லி ஏறத்தாள முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. டில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளி யும் டில்லி முகடும் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த மண்டப மண்ணை வழங்குகிறது. எனினும் இச்சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1.043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்வமாக விளங்குகின்றது. இது தெற்கே ஆரவல்லி மலைத் தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வட மேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமான தாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே டில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புதுடில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
டில்லி இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப் பெரிய மாநகரமாகும். இது தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புதுடில்லி மற்றும் டில்லி கண்டோன்மென்ட் ஆகியன வாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது மத்திய அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜஹான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டு வரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. 18ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், கல்கத்தாவே இன்றைய கொல்கொத்தாவாக அவர்களது தலைமையிடமாக இருந்தது.
கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜோர்ர்ஜ் மன்னர் தலைநகரத்தை டில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920 களில் பழைய டில்லி நகருக்குத் தேற்கே புதுடில்லி எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகரமாகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் டில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும் டில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு , அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது. (தொடரும்)

Saturday, August 22, 2009

சுற்றுலா தலம் போல காட்சியளிக்கும் இந்தியா கெட்


கே. அசோக்குமார் ...-
இலங்கையின் பாராளுமன்றத்தின் பத்திரிகையாளர் கலரியிலிருந்தவாறு பாராளுமன்ற அமர்வுகளின் போது நடைபெறும் விவாதங்களை அவதானித்தவாறு செய்திகள் சேகரிக்கும் பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர்களான எமக்கு இந்திய பாராளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த வாய்ப்பை எற்படுத்தித் தந்தவர் எமது வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம என்பதை குறிப்பிட வேண்டும்.
எமது சகோதர பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான தயா பெரேராவின் தலைமையில் இயங்கிய பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தயா பெரேராவின் வேண்டுகோளையடுத்து ‘வெளிநாட்டு இராஜதந்திர உறவுகள்’ என்ற தலைப்பில் ஒருவார செயலமர்வுகளையும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தியா கேட்
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாகத்தான் பாராளுமன்ற ஊடகவியலாளர்களை புதுடில்லிக்கு அனுப்பும் திட்டத்தையும் அமைச்சர் முன்வைத்தார்.
இதற்கமைய எமது குழு புதுடில்லி புறப்பட்டது. புதுடில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய எமது ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமானம் ஓடு பாதையிலிருந்து விமான நிலைய இறங்குதுறையை அடையவே வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது.
விமான நிலைய ஓடு பாதையெங்கும் விமானங்கள் தரையிறங்குவதையும் புறப்பட்டுச் செல்வதையும் காணக்கூடியதாக இருந்தது.
அமைச்சர் போகொல்லாகம பயணச் சீட்டை வழங்குகிறார்
விமான நிலைய விஸ்தரிப்பு வேலைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது இந்திய விமானப் படையின் தளமாக பயன்படுத்தப்பட்ட இந்த விமான நிலையம் பாலம் எயார்போர்ட் என அழைக்கப்பட்டது. பாலம் எயார் போர்ட் மணிக்கு 1300 பயணிகளை கொள்ளக்கூடியதாகவே இருந்தது. 1962 களில் இந்த விமான நிலையம் பயணிகள் பயன்படுத்தக் கூடியதாக மாற்றப்பட்டது.
1970களில் விமான நிலைய விஸ்தரிப்புகள் நடைபெற்றன. மேலதிக இறங்குதுறைகள் அமைக்கப்பட்டன. 1986 ஆம் ஆண்டுகளில் விமான நிலையம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டது.
நாம் விமான நிலையத்திற்குள் சென்றதும் அங்கு இன்னமும் விமான நிலைய விஸ்தரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டோம். சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அதிநவீன விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது மணிக்கு 30 முதல் 40 விமானங்கள் வரை வந்து செல்கின்றன. 2010இல் இத்தொகையை 70 வரை அதிகரிப்பதே நோக்கம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்திலிருந்து புதுடில்லியில் நாம் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நகர் பகுதிக்கு செல்லும் போது விமான நிலையத்திலிருந்து நேரடியாக நகருக்குள் சில நிமிடங்களிலேயே செல்லக்கூடியவாறு மெட்ரோ ரயில் (மின்சார ரயில்) சேவைக்கான மேம்பாலம் அமைப்பதை காணக்கூடியதாக இருந்தது. மின்சார ரயிலில் சுமார் 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை வாகன நெரிசல் காரணமாக சுமார் 1 1/2 மணி நேரத்தின் பின்னரேயே சென்றடைய முடிந்தது.
ஜுலை 13ஆம் திகதி அதிகாலை இந்திய பாராளுமன்றத்தின் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற கற்கைகள், பயிற்சிகள் பணியகத்திற்கு எம்மை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதிய விமான நிலையம் இப்படித்தான் காட்சியளிக்குமாம்
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திலுள்ள பெண் அதிகாரி திருமதி ஜானகி வந்து எம்மை அழைத்துச் சென்றார்.
பாராளுமன்ற பணியகத்துக்குச் செல்ல நேரம் இருப்பதால் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள மற்றுமொரு முக்கிய இடத்திற்கு எம்மை அழைத்துச் சென்றார்.
முதலாவது உலக மகா யுத்தத்தின் போதும் ஆப்கான் யுத்தத்தின் போதும் உயிரிழந்த பிரிட்டிஷ், இந்திய போர் வீரர்களை நினைவுகூரும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் ‘இந்தியா கேட்’
சுமார் 90,000 படை வீரர்கள் போர்க்களங்களில் கொல்லப்பட்டதை நினைவு கூரும் வகையில் 1921 ஆம் ஆண்டு சேர் எட்வின் லுடியன்ஸ் என்பவரால் இச் சின்னம் வடிவமைக்கப்பட்டது.
புதுடில்லி நகரின் மத்தியிலமைந்துள்ள இச் சின்னம் 42 மீற்றர் உயரம் கொண்டது. புதுடில்லி நகரில் உள்ள பிரதான பாதைகள் அனைத்தும் இந்தியா கேட் இருக்கும் பகுதியூடாகவே அமைந்துள்ளன. இங்கிருந்து நேரடியாக இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு செல்லவும் முடியும்.
இலங்கை ஊடகவியலாளர் குழு
இந்திய பாராளுமன்றம், ராஷ்டிரபதி பவன், இந்தியா கேட் இவை இப்பகுதியின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. இரவு வேளையில் எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி அதிசக்திவாய்ந்த மின் விளக்குகளால் இந்தியா கேட் கட்டடம் ஜொலிப்பதை காணக்கூடியதாய் இருந்தது. இப் பகுதி ஒரு பூங்காவைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதால் பயணிகளும் டெல்லி வாசிகளும் பொழுது போக்குக்காக இங்கே வந்து அமர்ந்திருப்பதை இரவிலும் காணலாம்.
மாலை வேளைகளில் கடற்கரையில் மக்கள் வெள்ளம் கூடுவது போல் பொழுது போக்குக்காக மக்கள் வெள்ளம் கரை புரண்டோடுவதை காணமுடிந்தது. மேலும் நீர்த்தடாகத்தில் குழந்தைகள் பெரியோர் அலங்கார வள்ளங்களில் சென்று மகிழ்வதையும் காண முடிகிறது.
இந்தியா கேட் அருகே சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக வினோதமான பொருட்களுடன் திரியும் அங்காடி வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் கைடுகளிடமிருந்து தப்பி வாகனத்துக்குள் ஏறிவிட்டோம். அப்பாடா!
காலை 11.00 மணிக்கு இந்திய பாராளுமன்றத்தின் கற்கைகள், பயிற்சிகள் பணியகத்தின் நுழைவாயிலுக்கு சென்றோம்.
எம்முடன் வந்து இலங்கைத் தூதரகத்தின் அதிகாரி திருமதி ஜானகி மேற்படி பணியகத்தின் உதவி பணிப்பாளர் ராஜ்குமாரிடம் எம்மை ஒப்படைத்தார்.
அவர் எம்மை பாராளுமன்ற கட்டடத் தொகுதி நுழைவாயில் பாதுகாப்பு பிரிவுக்குள் அழைத்துச் சென்றார். எமது கடவுச்சீட்டு எழுதுவதற்கான பேனா, வழங்கப்பட்ட ஆவண கோப்பு, பணம் வைத்திருக்கும் பர்ஸ் இவை தவிர எதுவும் /{‘மி கொண்டு செல்ல அனுமதி இல்லை.
பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் விசேட அனுமதி அட்டைகளுடன் உள்ளே சென்றோம்...


CHAMBER OF PRINCES என அழைக்கப்பட்ட
இந்திய பாராளுமன்றம்

கே. அசோக்குமார் ...-
இந்திய பாராளுமன்ற கட்டட வளவில் அமைந்துள்ள நூலக கட்டடத் தொகுதியில் அமைந்திருக்கும் பாராளுமன்ற கற்கைகள், பயிற்சி நெறிக்கான பணியகத்தில் இலங்கையிலிருந்து சென்ற பாராளுமன்ற ஊடகவியலாளர் குழுவுக்கு முழுநாள் செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

செலியூலர் தொலைபேசிகள், கமராக்கள் போன்ற எந்தவிதமான இலக்ரோனிக் உபகரணங்களும் உள்ளே கொண்டு செல்ல முடியாது. பலத்த சோதனையின் பின் உள்ளே சென்றோம். எமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டு மண்டபத்தினுள் அழைத்துச் செல்லப்பட்டோம். மக்களவை (லோக் சபா) செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் ஆர். எல். ஷாலி எம்மை வரவேற்று எம்மைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்.

நூலகத்தின் மாதிரி தோற்றம்

வெளிச்சம் தரும் நூலக கூரை

இந்திய பாராளுமன்ற அமர்வுகளை எவ்வாறு ஊடகங்கள் மக்களுக்கு அறிவிக்கின்றன? அதற்கான வழிவகைகள் என்ன? என்பன போன்ற பல்வேறு தகவல்களையும் விளக்கங்களையும் லோக் சபா செயலகத்தின் இணைச் செயலாளர் பீ. கே. மிஸ்ரா எம்மிடம் தந்தார், விவரித்தார்.
இந்திய பாராளுமன்றத்தின் லோக் சபா செயலகமாகவும் பாராளுமன்ற நூலகமாகவும் மாநாட்டு மண்டபங்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு அறை, நூலக கட்டடமாகவும் இக்கட்டடம் அமைந்திருக்கிறது.

மார்கரட் அல்வா

பீ. கே. மிஸ்ரா நூலக கட்டட கலைஞர்

ராஜ் ரிவால்

அதிநவீன தொழில் நுட்பமும், பழைமையையும் ஒன்றிணைத்த சுமார் 10 ஏக்கர் விஸ்தீரணத்தில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. 50,000 சதுர அடிகொண்டதாக முழு கட்டடமும் மூன்று மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நூலகத்தில் நிலக்கீழ் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
நாம் அமர்ந்திருந்த பகுதி (Committee Room C - Ground Floor என குறப்பிடப்பட்டிருந்தது. இதே கட்டடத்திலேயே லோக் சபா ஸ்டூடியோக்களும் அமைந்திருந்தன.
பாராளுமன்ற கற்கைகள், பயிற்சி நெறிகளுக்கான பணியகம்
புதிதாக நியமனம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடைமுறைகள், சிறப்புரிமைகள் போன்ற முக்கிய விடயங்கள் குறித்த செயலமர்வுகள் எமது நாட்டிலும் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல் பாராளுமன்ற உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், மக்களவை, மாநிலங்களவை சட்டமன்ற உறுப்பினர்கள், எல்லோருக்குமாக பயிற்சிகளையும், கற்கைகளையும் இந்த பணியகம் வழங்குகிறது.
குறிப்பாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சட்ட சபை உறுப்பினர்களுக்கும் இதே போன்று விசேட பயிற்சிகளை வழங்குகிறது. இவை அனைத்தும் இலவசமே.
இலங்கையிலிருந்தும் எமது பாராளுமன்றத்தில் உதவி சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உத்தியோகத்தர்கள் இருவரும் பயிற்சிகளை பெற்றுத் திரும்பியதாக தெரிவித்தனர்.
மக்களவை (லோக் சபா)யின் செயலகத்தின் ஒரு பிரிவாக 1976 ஆம் ஆண்டிலேயே மேற்படி பணியகம் உருவாக்கப்பட்டது.
இப்பணியகத்தில் இரண்டு பிரதான பயிற்சி மற்றும் கற்கை நெறிகள் உள்ளன. ‘பாராளுமன்ற உள்ளக பயிற்சி செயற்திட்டம்’ என்றும் சட்டவாக்க வரைபுகள் குறித்த சர்வதேச பயிற்சித் திட்டம் என்ற இரு பயிற்சித் திட்டமும் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விரிவுரைகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், விவாதங்கள், தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் என்பவற்றையும் தொடர்ந்தும் இந்த பணியகம் நடத்திவருகிறது.
இந்தப் பணியகத்தின் கெளரவ ஆலோசகராக திருமதி மார்கிரட் அல்வா என்ற பழுத்த அரசியல்வாதி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பணியகத்தின் நடைமுறைகள் மட்டுமல்லாது இந்திய அரசியலமைப்பு, பாராளுமன்ற நடைமுறைகள் குறித்தும் எமக்கு விளக்கமளித்தார்.
இந்திய பாராளுமன்றத்தின் விசேட விருந்தினர் உணவு அறையில் திருமதி மார்கிரட் அல்வாவுடன் எமது குழுவினருக்கு பகல் உணவு அளிக்கப்பட்டது.
திருமதி மார்கிரட் அல்வா
தற்போது உத்தர காண்ட் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள இவர் முதலாவது பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெறுகிறார். இந்திய தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும் இருந்த இவர் 1942 ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்தார்.
2009 ஜூலை 29 ஆம் திகதி உத்தரகாண்ட் மாநில ஆளுனராக திருமதி சோனியா காந்தி நியமித்தார். தீவிர காங்கிரஸ் ஆதரவாளரான இவர் மேற்படி பணியகத்தின் கெளரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே அவரை சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.

பாராளுமன்ற நூலகம்

மதிய உணவு வேளையின் பின்னர் பாராளுமன்ற நூலகத்தை சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
நூலகத்தின் கட்டடப் பகுதி பல பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. செய்திப் பத்திரிகைகளுக்கென தனியான பிரிவு இருக்கிறது. எமது லேக்ஹவுஸ் நிறுவனத்திலிருந்து வெளிவரும் எமது சகோதர பத்திரிகையான டெய்லிநியூஸ் பத்திரிகை உட்பட எந்தவொரு நாட்டில் பிரசுரமாகும் பத்திரிகையையும் இங்கு காணலாம். எங்கும் மிக அமைதியான சூழல், நூலகத்தின் உள்ளே வெளிச்சத்திற்காக மின் விளக்குகள் இல்லை. இயற்கை வெளிச்சம் உள்ளே பரவும் அளவுக்கு இக்கட்டத்தின் கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பமும், இந்திய பாரம்பரிய கட்டடக் கலையும் ஒருங்கிணைந்து காணப்படும் கட்டடம் இது. மகாத்மா காந்தியின் நூல்களுக்கென தனியான அறை. இதில் அவரைப் பற்றிய சகல தகவல்களும் உள்ளடக்கப்பட்ட ஆயிரக் கணக்கான நூல்கள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன.
ஜவஹர்லால் நேருவின் நூல்களும் ஒரு தனியான அறையில் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்காக தனியான நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நூலகத்திலிருந்து வெளியேறிய போது பாராளுமன்றத்தில் மக்களவை அமர்வுகளை நேரடியாக பார்ப்பதற்காக எம்மை அழைத்துச் செல்ல பிரதிநிதி ஒருவர் வந்திருந்தார்.
மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரையில் பார்வையாளர் கலரியில் அமர்ந்து பார்க்க முடியும் என எமக்காக வழங்கப்பட்டிருந்த அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அனுமதி அட்டையையும் பையில் உள்ள பணத்தையும் தவிர வேறு எதனையும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
இந்தியப் பாராளுமன்றம்

பாராளுமன்ற கட்டடத்தினுள் நுழைந்த வேளையிலிருந்து லோக்சபா பார்வையாளர் கலரிக்குள் நுழையும் வரை சுமார் 5 - 6 இடங்களில் தீவிர பரிசோதனைகள் நடக்கின்றன. பழைமையும் சரித்திர முக்கியத்துவமும் மிக்க இக் கட்டடத்தை வெறும் கட்டடமாக கருதாமம் இங்குள்ளவர்கள் இதை இந்திய ஜனநாயகத்தின் உச்ச ஸ்தானமாகவும் ஒரு கோவிலைப் போன்ற புனிதமான இடமாகவும் கருதுவதை அவதானித்த போது மெய்சிலிர்த்தது. இதை நாட்டுப் பற்றின் வெளிப்பாடாக நாம் காணலாம்.
இந்தியப் பாராளுமன்றத்தை ஹிந்தியில் ‘சன்சத்பவன்’ என அழைக்கிறார்கள். இந்தக் கட்டடம் வட்டவடிவ அமைப்பில் கட்டடப்பட்டுள்ளது.
சேர். எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சேர். எர்பர்ட் பேக்கர் ஆகிய இருவரே இக்கட்டடத்தை வடிவமைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிரித்தானிய கட்டடக் கலைஞர்களாவர்.
1912- 1913 ஆம் ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு கட்டட வேலகள் 1921 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1927 இல் மாநிலங்கள் அவைக்காகவும், மத்திய சட்டமன்றத்திற்காகவும் அமைக்கப்பட்ட இக் கட்டடம் ஆரம்பத்தில் இளவரசர் கூடம் (CHAMBER OF PRINCES) என அழைக்கப்பட்டது.
144 பளிங்குத் தூண்களால் கட்டடத்தின் வெளிக்கட்டுமானச் சுவர் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் நேரடியாக செல்லலாம். இதன் தோற்றத்தை நான் முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டது போன்று இந்தியா கேட் பகுதியிலிருந்தும் பார்க்க முடியும். (தொடரும்)

கேள்வி நேரம் நேரடியாக லோக் சபா டிவியில் ஒளிபரப்பாகிறது

கே. அசோக்குமார்
மாலை சுமார் 4.00 மணிக்குத்தான் இந்திய பாராளுமன்றத் தில் லோக்சபாவுக்கு (மக்களவைக்கு) செல்வதற்கான அனுமதி எமக்கு வழங்கப்பட்டிருந்தது. சபாநாயகரின் ஆசனத்துக்கு எதிரே பார்வையாளர் கலரியில் எம்மை அமரச் செய்தார்கள். மெளனமாக அமர்ந்தவாறு சபை நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்தோம்.
வரவு-செலவு திட்டம் மீதான குழு நிலை விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சபாநாயகரின் ஆசனத்தில் தமிழ்நாடு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற் றக் கழகத்தின் உறுப்பினர் திரு. தம்பித்துரை அமர்ந்து சபையை வழிநடத்திக் கொண்டிருந்தார். நாம் பார்வையாளர் கள் கலரியில் அமர்ந்திருக்கும் போதே, இந்தியா இலங்கை க்கு ஒதுக்கிய நிதி விவகாரம் தொடர்பாக தமிழக உறுப்பி னர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.

தம்பித்துரை எம்.பி

இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்காக இலங்கை அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிரக்கும் போது இந்தியா 500 கோடி ரூபாவை தந்துதவுவதாக குறிப்பிட்டது எமக்கு மகிழ்ச்சியினைத் தந்தது. சபையில் உறுப்பினர் ஒருவருக்கு பேசுவதற்காக நேரம் வழங்கப்பட்டவுடன் அவருக்கு வழங்கப்பட்ட நேரத்துள் அவர் பேசி முடிக்க வேண்டும்.
ஆனால் சபையில் சில உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வது வழமையாம். சபாநாயகரோ அல்லது அவரது ஆசனத்தில் அமர்ந்தவாறு சபையை வழிநடத்தும் உறுப்பினரோ நேரம் முடிந்து விட்டது என்பதை தெரியப்படுத்தி அடுத்த உறுப்பினரை பேச அழைப்பார். லோக் சபாவிலும் எமது நாட்டில் போலவே தமக்குரிய நேரம் முடிவடைந்த பின்னரும் விடாமல் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்து நாடுகள் தானே!
ஒரு உறுப்பினர் பேச ஆரம்பித்து முடிவடையும் தறுவாயில் நேரம் முடிவடைந்து விட்டது என்பதை அறிவிக்க மணி ஒலிக்கும். இந்த மணி மூன்று முறை ஒலிக்கும். அதுவும் அவர் அமரவில்லையானால் அடுத்த உறுப்பினர் பேச ஆரம்பித்துவிடுவார். எமது நாட்டில் கள அமர்வுகள் 9.30க்கு ஆரம்பமாகின்றன. இந்தியாவில் 11 மணிக்கு ஆரம்பமாகிறது.
இலங்கையில் காலை 9.30 முதல் 10.30 மணிவரை வாய்மொழி விடைக்கான கேள்வி நேரம் நடைபெறுகிறது. அங்கு 11.00 மணி முதல் 12.00 மணி வரை கேள்வி நேரம். இதனை Rush Hour என்றுதான் சொல்ல வேண்டும். கேள்வி நேரம் நேரடியாக லோக்சபா டி.வி. அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதை குறிப்பிட வேண்டும். (லோக்சபா) மக்களவை என்றால் என்ன அதன் செயற்பாடுகள் என்ன என்பதை முதலில் சொல்லியே ஆகவேண்டும்.
லோக்சபா (மக்களவை)
மக்களவை அல்லது லோக்சபா என்பது இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவையையே குறிக்கிறது. மக்களவைக்கு உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவர்கள் Member of parliament (MP) என நம்மூரைப் போலவே அழைக்கப்படுகின்றார்கள். இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினர்களான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கை இதுவாகும்.
ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும். இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்னர் 15வது மக்களவை துவங்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான பிரதிநிதிகள். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசர நிலைப்பிரகடன காலத்தில் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீடித்து முடக்கலாம். 14 வது மக்களவை மே 2004ல் துவங்கி 2009 பொதுத் தேர்தல் வரை நடைபெற்றது.
தற்பொழுது 15வது மக்களவை நடைபெறுகின்றது. மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்தெடுக்கப்பட்டதின்படி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார்.
உறுப்பினராவதற்கான தகுதிகள்
மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாகவும் வயது 25 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமுறை வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும். தனித்தொகுதிகளில் (Reserved constituency) போட்டியிட ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தால் மட்டுமே போட்டியிட முடியும்.
மக்களவை, கூட்டத் தொடர்கள் வீ வழக்கமான மக்களவை கூடும் அலுவல் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது. வீ ஒவ்வொரு கூட்ட அமர்வின் பொழுதும் முதல் மணி நேரம் கேள்வி நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உறுப்பினர்கள் அமைச்சர்களின் இலாகா சம்பந்தமான கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுகின்றது. இதற்கான பதில்கள் தரும் நாட்களும் கேள்வி நேரத்தின் பொழுதே தெரிவிக்கப்படுகின்றன.
மாநிலங்களவை ராஜ்யசபா போன்றே மக்களவையும் அதற்கு ஈடான அதிகாரங்களை கொண்டுள்ளது.
பணிவிடை மசோதாக்களை மாநிலங்களவையில் (ராஜ்ய சபாவில்) நிறைவேற்ற முடியாது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியும்.
இரு அவைகளினாலும் எதிரொலிக்கப் பெறும் சர்ச்சைள் அல்லது முடிவுக்குவரா சர்ச்சைகள், விவாதங்கள் இரு அவைகளும் சேர்ந்தமர்ந்து நடத்தப்பெறும் கூட்டுகூட்டத்தில் முடிவெடுக்கப்படுகின்றது. அச்சமயம் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மக்களவையில் இரு மடங்கு உறுப்பினர் இருப்பதால் மக்களவை மேலோங்கிய அவையாக செயல்படும்.
மக்களவை ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படும். நிதிநிலை அறிக்கை பட்ஜட் கூட்டத் தொடர்: பெப்ரவரி - மே மழைக்கால கூட்டத்தொடர்: ஜூலை -செப்டெம்பர் குளிர்கால கூட்டத்தொடர்: நவம்பர்-டிசம்பர்
மாநிலங்கள் அவை (ராஜ்ய சபா)
மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய பாராளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்ந்த மற்றவர்கள் மாநில சட்டமன்றி உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர்.
இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முடிவடையும். குடியரசுத் துணைத் தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார். மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். மக்களவையைப் போல மாநிலங்களவை கலைக்கப்படுவதில்லை. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களவையை விட இரு மங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள வீட்டோ அதிகாரங்களை கொண்டிருக்கிறது.
மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை ex-officio கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரி பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிகமாக கூட்டத் தலைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர். மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13,1952 அன்று துவக்கப்பட்டது.
மாநிலங்களவை உறுப்பினர் அவதற்கான தகுதி
ஒருவர் மாநிலங்களைவை உறுப்பினர் இந்தியக் குடிமகனா கவும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், இருத்தல் வேண்டும். கடனாளியாகவும் குற்றம் புரிந்தவரா கவும் இருக்கவில்லை என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத் தில் உறுதி அளிக்க வேண்டும். தனித்தொகுதிகளில் போட்டி யிட அவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப் பைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம். அவரே பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடலாம்.
உறுப்பினர்களின் நியமனங்கள்
உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றப்படுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்க ளின் பிரதிநிதித்துவத்திற்கேற்றால்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்படு கின்றன. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உறுப்பினர் அவர் பதவி விலகி னாலன்றி வேறு ஒருவரை அப்பதவியில் நியமிக்க முடியாது.
தலைவரின் அதிகாரங்கள் மக்களவைத்
மக்களவைத் தலைவரே பேரவையே நடத்துபவர். கண்காணிப்பதும் மற்றும் பேரவைகளின் அலுவல்களை கவனிப்பரும் அவரே. மசோதாவின் தன்மைகளை ஆராய்ந்து (பண விடை மசோதா மற்றும் பண விடையில்லா மசோதா) அதன்படி தாக்கல் செய்ய அனுமதிக்கின்றார். பேரவையை அதன் மாண்பு குறையாமல், இறையாண்மை குறையாமல், ஒழுக்கத்துடன் நடைபெறக் கடப்பாடு கொண்டுள்ளார்.
தீர்மானங்களை அவரின் அனுமதியின்றித் தாக்கல் செய்யமுடியாது. நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், கண்டனத் தீர்மானம் மற்றும் கவன ஈர்ப்புத் தீர்மானம் போன்ற தீர்மானங்களை அனுமதிக்கின்றார். அவரின் இசைவினால் விவாதங்கள் ஏற்கப்படுகின்ற மற்றும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.





(தொடரும்)