Saturday, July 10, 2010

தினமும் 18 பதிப்புகளை வெளியிட்டு வரும் நெட்வேர்க் 18 ஊடக நிறுவனம்

ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் காணப்படும் மேன்சிங் வீதியின் நுழைந்தவுடனேயே முதலாவதாக தென்படும் தாஜ்மேன் சிங் ஹோட்டலுக்குள் நாம் சென்ற இந்திய தயாரிப்பான போர்ட் ரக சொகுசு வாகனம் நுழைந்தது.
வரவேற்பதற்காக புதுடில்லியிலுள்ள வெளியுறவு அமைச்சின் பிரசார பணிப்பாளர் கோபால் பாக்லே வந்திருந்தார். பிசியான வீதியொன்றில் வாகன நெரிசல்.
ஹோட்டலுக்குள் வாகனங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. கார் கதவுகளை திறந்துவிடவும், விருந்தினர்களை வழியனுப்பவுமாக ஹோட்டல் முன்வாயிலில் சுழன்று கொண்டிருந்தார்கள். மன்னர் காலத்து உடைகள், விசிறியை தலையில் வைத்தது போன்ற பெரிய தலைப்பாகை, பக்கவாட்டில் தொங்கவைத்திருக்கும் நீளமான வாள். ஒவ்வொருவரும் சுமார் 6ண அடி உயரம் இருக்கலாம். பிரமாண்டமான உருவங்களுடன் நீளமாக வளர்க்கப்பட்ட கிர்தாவுடன் நிற்பதை பார்க்கும் போது எங்கோ அரண்மனை வாசலில் நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. ஹோட்டல் கட்டடமும் அரண்மனை போன்ற அமைப்புதான்.
புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரியான ஜானகி பர்னாண்டோ எம்மை ஹோட்டலில் விட்டு விட்டுப் புறப்பட்டார். எமக்குரிய அடுத்த நிகழ்ச்சி நிரலை தயார் படுத்துவதற்காக.
பகல் போசன விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலின் Villa Medici பகுதிக்கு லிப்டில் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதுவர் ரொமேஷ் ஜயசிங்க எச்.டி.மீடியா லிமிட்டடின் இணை ஆசிரியர் சரோஜ் நாகி ஹிந்து பத்திரிகையின் சிரேஷ்ட உதவி ஆசிரியர் கே.வி. பிரசாத் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் இருந்தனர். நாம் சென்று சற்று நேரத்திலேயே இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் ரி.எஸ். திருமூர்த்தி வந்தார். எம்மை அவருடன் அறிமுகம் செய்து கொண்டதுடன் அவருடன் பகல் போசன விருந்துபசார மேசையில் அமர்ந்து கொண்டோம்.
இலங்கை- இந்திய உறவுகள் வலுவடைந்துள்ளமை பற்றியும் இலங்கை பாராளுமன்ற ஊடகவியலாளர்கள் முதல் முறையாக இவ்வாறான ஒரு பயணத்தை புதுடில்லிக்கு மேற்கொண்டமைக்காக வரவேற்பு தெரிவிப்பதுடன் இந்த பயணத்தை ஏற்பாடு செய்த எமது வெளியுறவு அமைச்சிக்கும், அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டு விருந்துபசாரத்தை ஆரம்பித்து வைத்தார். பதிலுக்கு எம்மோடு புதுடில்லி பயணத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சாந்தனி கிரிந்த, எமக்கு இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த அமைச்சுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இலங்கையில் கடந்தாண்டு நடைபெற்ற ‘சப்மா’ தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சரோஜ் நாகி என்பவரே எம்முடன் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். இந்திய பாராளுமன்றத்தின் சபாநாயகரினால் நியமிக்கப்பட்டுள்ள Press Advisory Committee யின் தலைமைப்பதவியை ஏற்றுள்ளவரும் இவரே.
பாராளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்புக்காக செல்லும் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பாக முடிவுகளை எடுக்கும் உரிமை இந்த Press Advisory Committee க்கே உள்ளது. இதன் நடவடிக்கைகள் எவ்வாறு என்பது பற்றிய விபரங்களை அடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாக பார்ப்போம்.
இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் ரி.எஸ். திரு மூர்த்திக்கு அருகில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் நானும் அவரும் தமிழிலேயே உரையாடினோம். இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் இலங்கையில் தற்போதைய நிலை எவ்வாறு இருக்கிறது. என்பதை அறயவும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுதல், நிவாரணக் கிராமங்களில் வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்தும் ஆவலாய் கேட்டறிந்து கொண்டார்.
இலங்கை பரீட்சை திணைக்களத்தால் க.பொ.த. உயர்தரம், 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான நிவாரணக் கிராமங்களில் எவ்வாறான வசதிகளை செய்து வருகிறது என்பதை நேரில் சென்று அவதானித்தவன் என்பதால் நேரில் கண்டவற்றை ஏட்டில் தயாரித்து வெளியுறவு இணைச் செயலாளர் திருமூர்த்தியிடமும் எமது இலங்கைத் தூதரிடமும் கையளித்தேன
பகல் விருந்துபசாரம் முடிவடைந்தவுடனேயே புதுடில்லியிலிருந்து நொய்டா செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புதுடில்லியிலிருந்து உத்தரப் பிரதேசத்தை நோக்கி எல்லையை கடந்து செல்ல வேண்டும். சுமார் ஒரு மணி நேர பயணத்தின் பின்னர் நொய்டாவிலுள்ள திரைப்பட நகர்பகுதிக்குள் பிரவேசித்தோம். புதுடில்லியிலிருந்து உத்தரபிரதேச எல்லையை கடந்து செல்வதற்காக தனியான கட்டணம் செலுத்தவும் வேண்டும்.
CNN-IBN உட்பட அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களாக மும்பாய், டெல்லி என பல இடங்களிலிருந்தும் 24 மணி நேர செய்தி ஒளிபரப்புகளையும் பத்திரிகைகளிலும் அச்சிட்டு வரும் நிறுவனம்தான் Network 18 என்ற நிறுவனமாகும். நொய்டாவிலிலுள்ள எக்ஸ்பிரஸ் டிரேட் டவர் என்ற கட்டத்தின் 15,16,16 ஏ மாடிகளில் Network 18 நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் முகாமைத்துவ ஆசிரியர் வினய் திவாரி எம்மை வரவேற்றார். இந்தியா முழுவதும் செய்மதியூடான தொலைக்காட்சி அலைவரிசையாக விளையாட்டு செய்திகள், பேட்டிகள் வர்த்தகம் என சகல துறைகளிலும் உள்ளடக்கலாக இந்த நிறுவனம் செயற்படுகிறது.
இந்திய பாராளுமன்ற அமர்வுகளை இந்த தொலைக்காட்சி நிறுவனம் எவ்வாறு ஒளிபரப்புகிறது என்பது பற்றி புபேந்திரா செளபி என்பவரும், வினய் திவாரி என்பரும்எம்முடன் கலந்துரையாடினர். இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு அவர்கள் ஆவலாய் இருந்தது எமக்கு நன்றாக புலனாகியது.
எமது நாட்டிலிருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகள் அனைத்தும் தினமொன்று மூன்று அல்லது நான்கு பதிப்புகளாக அச்சிடப்படுவதுண்டு. சில பெரும்பான்மை மொழி பத்திரிகைகள் 4 அல்லது 5 பதிப்புகளை அச்சிடுவதுமுண்டு. எமது நாட்டிலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றால் போன்று பத்திரிகைகளின் விற்பனையும் அமைகிறது. Network 18 நிறுவனத்தினால் வெளியிடப்படும் செய்திப் பத்திரிகை 18 பதிப்புகள் அச்சிடப்படுவதாக அறிய முடிந்தது இலங்கையை விட பன்மடங்கு பெரிதான நாடு மட்டுமல்ல சனத்தொகையிலும் அதிகமான நாடு என்பதால் இது சாத்தியமாகலாம்.
Network 18 ஸ்டூடியோக்களை பார்வையிடுவதற்காக உள்ளே அழைத் செல்லப்பட்டோம். செய்தி வாசிக்கும் மேஜைக்கு மேல் ‘Braking News’ என எழுத்துகள் ஓடிக் கொண்டிருந்தன. அத்துடன் இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றியடைந்து விட்டது என்ற எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன. நாம் இலங்கையர் என்பதால் ஸ்டூடியோவுக்குள் இருந்த அனைவரும் எமக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
எமது கலந்துரையாடலுக்கு மத்தியிலும் இலங்கை வெல்லப் போகிறது. இன்னும் இரண்டு ரன்கள் தான் எடுக்க வேண்டும் ஒரு ரன்தான் எடுக்க வேண்டும் என எமக்கு அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார் ஒரு சிங்.
24 மணிநேர அலைவரிசை என்பதால் அந்தப் பகுதியே ஜனநடமாட்டம் நிறைந்த பகுதியான வாகனங்களைக் கூட நிறுத்த இடமில்லாமல் இருந்தது. போகும் போது ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைந்த போதும் திரும்பி வருவதற்கு சுமார் மூன்று மணி நேரத்தையும் விட சென்றுவிட்டது.
(தொடரும்)

1 comment: