Saturday, July 10, 2010

போதி மாதவனின் புனித எலும்புகளைக் கொண்டிருக்கும் டில்லி அருங்காட்சியகம்

பெளத்த மக்களால் தரிசிக்கப்படுகின்ற புத்தரின் புனித தந்தம் கண்டி தலதா மாளிகையில் தங்கப் பேழையில் வைக்கப்பட்டுள்ளது. பெளத்தர்கள் இதனை ‘தந்த தாதுன் வஹான்சே’ என அழைப்பார்கள். அதே போன்று பெளத்தர்களால் ‘கேஷதாதுன் வஹன்சே’ என அழைக்கப்படுகின்ற புத்தரின் புனித கேசம் (தலைமயிர்) மியன்மாரில் வைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை இது இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது நினைவிருக்கலாம்.
இவை போன்றே ‘சர்வக்ஞதாதுன் வஹன்சே’ என பெளத் தர்களால் அழைக்கப்படுகின்ற புத்தரின் எலும்புகளின் துண்டுகள் தங்கப் பேழையில் புதுடில்லி தேசிய அருங்காட்சி யகத்தில் மிகவும் கவனமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதற்கென தங்கப் பேழையொன்றை தாய்லாந்து அன்பளிப்பாக வழங்கியும் இருக்கிறது. இலங்கையிலிருந்து புத்தகாயா, காசி போன்ற புனித தலங்களுக்கு செல்லும் இலங்கையர் (பெளத்தர்கள்) கட்டாயமாக தரிசிக்க வேண்டிய ஒன்றுதான் இது என புதுடில்லியில் உள்ள இலங்கையின் பிரதி தூதுவர் பாலித்த கனேகொட தெரிவித்தார்.
அருங்காட்சியத்தினுள் செல்வதற்கு வெளிநாட்டினருக்கு 150 ரூபாவும், கமரா கொண்டு செல்வதானால் அதற்கென 300 ரூபாவும் அறவிடுகிறார்கள். திங்கட்கிழமை மட்டும் அருங்காட்சியகம் மூடப்படும், ஏனைய நாட்களில் காலை 10.00 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும்.
இலங்கை தூதரகத்தின் பிரதி தூதுவர் கனேகொட, முதற் செயலாளர் சுகீஸ்வர, ஜானகி ஆகியோர் எம்முடன் வந்ததால் இலவசமாகவே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம்.
புத்தரின் புனித பேழை இருக்கும் பகுதியை சென்றடைந்ததும் என்னோடு வந்த ஏனையவர்கள் (பெளத்தர்கள்) பேழையை தொட்டு தரிசிப்பதும், தாம் அதற்கு மண்டியிட்டு வணங்குவதுமாக பல புகைப்படங்களை எடுக்குமாறு கூறிக்கொண்டே இருந்தார்கள். அவர்களை அங்கிருந்து வெளியே கொண்டுவர வெகு நேரமாகிவிட்டது. அருங்காட்சியத்தை பார்வையிட ஒருநாள் போதாது. இந்திய கட்டட கலை, ஓவியக் கலை புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்பட்ட கற் சிலைகள் என பார்க்கும் இடமெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
எம்மோடு வந்த தொலைக்காட்சி நிறுவன நண்பர்கள் இருவர் அருங்காட்சியக பொறுப்பாளரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையே அருங் காட்சியத்தில் இந்து நாகரிகம் தொடர்பாக ஏதாவது கண்களுக்கு தென்படுகின்றனவா? என தேடிய போது இரண்டு முக்கிய பொருட்கள் வளவுக்குள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.
சித்திரத் தேர்களை நாம் பார்த்திருக்கிறோம், மாத்தளையில் பஞ்சரத பவனியில் பார்த்திருக்கிறோம். முன்னேஸ்வரத்திலும் சித்திரத் தேரையும் பார்த்திருக்கிறோம். தலைநகரிலும் பார்த்திருக்கிறோம். சித்திரத் தேரில் சுவாமியின் பீடம் இருக்கும் இடத்திலிருந்து வியாழ மட்டம் என அழைக்கப்படுகின்ற பகுதிவரை சிறிய சிறிய சித்திர வேலைப்பாடுகள் மரத்தில் செதுக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் கட்டுத் தேர்கள் தான் உள்ளன. 18, 19 ஆம் நூற்றாண்டில் கும்பகோணம் லக்ஷ்மி நாராயணன் கோவில் திருவுலா சென்ற பிரமாண்டமான சித்திரத் தேர் ஒன்றையும் அருங்காட்சியகத்தின் நுழைவாயிலுக்கு அருகே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.
மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் அனைத்தையும் சித்திரிக்கும் விதத்தில் 425 சிறிய சிற்ப வேலைப்பாடுகளுடனும் ஆறு சக்கரங்களுடனும் சுமார் 2,200 கிலோ எடைகொண்ட இந்த சித்திரத் தேர் பழுதடையாமல் இருப்பதற்காக பிரமாண்டமான கண்ணாடி அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இதேபோன்று 15 ஆம் நூற்றாண்டின் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த ஆலயமொன்றின் பிரமாண்டமான சிவலிங்கம் ஒன்றும் பீடத்துடன் அருங்காட்சியகத்தின் முன் புறத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அருங்காட்சியகம்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களது சிந்தனையில் உதித்ததுதான் பாராளுமன்ற அருங்காட்சியகம்.
சுமார் 2500 வருடங்களுக்கு முன்னிருந்து இந்தியாவின் சரித்திரத்தையே நவீன தொழில்நுட்பம், மல்டி மீடியா, பனரோமா புரொஜெக்ஷன் அனைத்தையும் பயன்படுத்தி எவ்வளவு நேரமும் வேண்டுமானாலும் உள்ளே இருந்தவாறு பார்த்துக்கொண்டு இருக்கக் கூடியவாறு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு மெல்லிய ஒலியில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருக்க அருங்காட்சியகத்தினுள் நுழைந்தோம்.
எமது இலங்கை பாராளுமன்றத்திலுள்ளும் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது. முன்பிருந்த சபாநாயகரின் ஆசனங்கள், என நான்கு கதிரைகளும், அவர்கள் அணிந்திருந்த தொப்பிகள் என இரண்டு தொப்பிகளும் உள்நுழைவாயிலுக்கருகே வைக்கப்பட்டுள்ளன
பாராளுமன்ற அமர்வுகளை காண்பதற்காக வரும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அவற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை பலமுறை கண்டிருக்கிறோம். மாணவர்கள் பாராளுமன்றத்தினுள் வந்தால் எமது இலங்கை எவ்வாறு சுதந்திரம் அடைந்தது? சுதந்திரத்திற்காக போராடியவர்கள் யார்? பாராளுமன்றம் என்றால் என்ன?
இங்கே என்ன நடக்கிறது? இதன் அமைப்பு என்ன? ஆளுந்தரப்பு யார்? எதிர்த்தரப்பு யார்? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளே நடக்கும் சில வாக்கு வாதங்களை மட்டும் பார்த்துவிட்டு செல்கிறார்கள். பாராளுமன்றத்திற்கு வரும் மாணவர்களுக்கு பால் வழங்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டு இப்போதுதான் அதுவும் வழங்கப்பட்டும் வருகிறது.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடி உயிர் நீத்தவர்களை மினி தியேட்டர் ஒன்றினூடாக விசேட ஒளி - ஒலி அமைப்புகளுடன் கண் முன்னே கொண்டு வந்து காண்பிக்கிறார்கள்.
முதலாவது இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆடைகள் அவர் உபயோகித்த பொருட்கள், மகாத்மா காந்தியின் போராட்ட வடிவங்கள், அவரது உண்மையான குரலில் எனிமேஷன் முறையில் அவர் உடல் அசைவுகள் என்பவற்றை செய்து காண்பிக்கிறார்கள்.
வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த அருங்காட்சியத்துக்கு வந்து செல்கிறார்கள். புதுடில்லியிலுள்ள பாராளுமன்ற நூலக கட்டடத்தின் ஒரு பகுதியில் இந்த காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 2009 ஜுலை வரை மட்டும் சுமார் 77,000 பேர் வரை வருகை தந்துள்ளனர்.
வரவேற்பறையில் இலங்கை பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளான எங்களை அருங்காட்சியத்தை சுற்றிக் காண்பிப்பதற்கு ஆயத்தமாக இருந்த பெண் எம்மை வரவேற்றார். (தொடரும்)

No comments:

Post a Comment