Saturday, July 10, 2010

இலங்கையரும் இனி இருபது ரூபா டிக்கட்டில் தாஜ;மஹாலை தரிசிக்கலாம்

டில்லியில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் கொழும்பு கறுவாக்காட்டை ஒத்த சாணக்யாபுரி பகுதியில் உள்ளது. இங்கே வெளிநாட்டு தூதரகங்கள் அடுத்தடுத்து காணப்படுகின்றன. என்றாலும் இலங்கை தூதரகத்தை உடனடியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.
இலங்கையிலுள்ள கண்டி தலதா மாளிகை, மற்றும் பெளத்த வணக்கஸ்தலங்களின் மதில்கள் "எத்பவுர" என பெளத்த மக்களால் அழைக்கப்படுகின்ற அமைப்பில் இலங்கைத் தூதரக மதில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு இது நமது தூதரகம்தான் என்பதை நமக்கு எளிதாக அடையாளம் காட்டிவிடும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் 1942 களில் முதலில் ஆரம்மானது. இந்தியாவுக்கு இலங்கையின் முதல் பிரதிநிதியாக சேர் டி. பி. ஜயதிலக்க நியமிக்கப்பட்டிருந்தார். 1948 சுதந்திரத்தின் பின்னர் தான் முழுமையான உயர் ஸ்தானிகராலயமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஸ்திரம் பெற்றன.
ஆரம்பம் முதல் இலங்கையுடன் உள்ள நல்லுறவு காரணமாக இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கென சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பை இந்திய அரசு வழங்கியது. தூதுவரின் பிரதித் தூதுவர், மற்றும் உயர்ஸ்தானிகராலய இலங்கை அதிகாரிகள் ஆகியோருக்கான வாசஸ்தலங்களும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
இலங்கை - இந்திய உறவு குறித்து பேசும் போது 1942 ஆம் ஆண்டு முதல் முதலாக இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டது என்று கூறி விடமுடியாது.
அசோக்க சக்கரவர்த்தியின் புதல்வர் மஹிந்தன் இலங்கைக்கு வந்ததும், அவரது மகள் சங்கமித்தை வெள்ளரசு கிளையை இலங்கைக்குக் கொண்டு வந்தமையையும் இதன் ஊடாக இலங்கையுடனான உறவு ஆரம்பமானது. இதனை நினைவு கூரும் விதத்தில் இந்திய பாராளுமன்றத்தின் அருங்காட்சியகத்தின் நுழைவாயிலிலேயே சிலைகளாக செதுக்கி வைத்திருக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் ஆலோசனைக்கமைய பாராளுமன்ற அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவாயிலுக்கருகிலேயே சங்கமித்தை வெள்ளரசுக் கிளையை இலங்கைக்கு எடுத்து வந்தமையை சித்திரிக்கும் சுதையிலான சிற்பங்கள் உள்ளன.
இந்திய பாராளுமன்ற அருங்காட்சியகம் பற்றி அடுத்தடுத்துவரும் கட்டுரைகளில் விரிவாக பார்ப்போம்.
இலங்கைத் தூதரகத்தின் பிரதி தூதுவர் பாலித்த கணேகொடவின் இல்லத்தில் எமக்காக இரவு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு எம்மை உயர்ஸ்தானிகராலயத்தின் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்ன வரவேற்றார். அத்துடன் பிரதி உயர்ஸ்தானிகர் பாலித்த கணேகொடவும் வரவேற்றார்.
புதுடில்லி சென்று மூன்று தினங்களாகியும் சப்பாத்தி, பூரி, அலுபராட்டாவையே மொச்சு மொச்சு எனத் தின்று வெறுத்துப்போயிருந்த எமக்கு எமது தூதரகத்தில் விருந்து என்றதும் சோறு கறி ஞாபகம் வந்து நாக்கில் உமிழ் நீர்களை கட்டத் தொடங்கியிருந்தது. அங்கெல்லாம் ஹோட்டல்களில் பிளேட்டில் சோற்றை குன்று போலக் குவித்து அதன் மேல் கறிகளை அபிஷேகம் செய்து சாப்பிடுபவர்களை மருந்துக்கும் பார்க்க முடியாது. அதைப்பார்க்க தமிழ் நாட்டுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.
புதுடில்லி செல்பவர்களுக்கு சாப்பாடு ஒரு பிரச்சினைதான். சப்பாத்தியை எத்தனை நாள்தான் சாப்பிடுவதாம்? நாக்கு மரத்துப் போய்விடாது!
இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதித் தூதுவரின் இல்லத்துக்குள் சென்ற சில நிமிட நேரத்தில் அப்போது மிக முக்கிய இடமாகத் தெரிந்த சமையலறைக்குள் நுழைந்தேன். நம்மூர் சமையல் வாசனை கமகமத்தது. அங்கு எமது நுவரெலியாவை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரின் கண்காணிப்பில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. எனக்கு எது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
உணவு தயாராகும் வரை இலங்கை இந்திய உறவுகள் குறித்து உதவி தூதுவருடனும் முதற் செயலாளர் சுகீஸ்வர குணரட்னவுடனும் பேசிக் கொண்டிருந்த போது இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு பற்றியும் எம்மோடு பேசினார்.
இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை கண்டுகளிப்பதற்காக வரும் வெளிநாட்டினருக்காக பெருந்தொகை (ரூ 750/=) பணம் அறவிடப்படுகிறது. ஆனால் இலங்கைப் பிரஜைகளைப் பொறுத்தவரை இந்தியர்களுக்கு அறவிடும் அதே இருபது ரூபாவை கட்டணமாக அறவிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற இனிப்பான தகவலையும் எமக்குத் தந்தார்.
லேக்ஹவுஸ் பத்திரிகையாளர்கள் இருவர் தெரியாத்தனமாக இருபது ரூபா டிக்கட்டை வாங்கி உள்ளே சென்று இரண்டு தடவை லஞ்சப் பொலிஸாரிடம் சிக்கி ஏறக்குறைய 1300 ரூபாவரை இழந்து திரும்பிய கதை எனக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது.
சார்க் நாடுகளிலிருந்து வரும் உல்லாச பயணிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாம். தாஜ்மகால் நுழைவு வாசலிலேயே இதற்கான அறிவித்தல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உண்மைதான் நுழைவுக் கட்டணமாக 750 இந்திய ரூபாவை கொடுப்பது கொஞ்சம் கஷ்டமான காரணம் தான்.
புத்தகயா, தாஜ்மகால் போன்ற தலங்களைத் தரிசிக்க வரும் இலங்கையர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களை இலங்கை தூதரகம் செய்து வருவதுடன் இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைதாவது தொடர்பாகவும் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பது பற்றியும் அறியமுடிந்தது.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான உறவுகள் 1971 ஆம் ஆண்டுகளில் மிகவும் வலுப்பெற்றிருந்தது என்பதற்கு முன்னாள் மறைந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவுக்கும் முன்னாள் மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே இருந்த நெருங்கிய உறவு ஒரு காரணமாக இருந்தது என்பதையும் குறிப்பிடலாம்.

புதுடில்லியை பற்றி கூறுவதென்றால் சைக்கிள் ரிக்ஷாவை பற்றி கூறாமல் இருந்துவிட முடியாது. புதுடில்லி நகரில் ஜனநடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் எல்லாம் எங்கு பார்த்தாலும் கைக்கிள் ரிக்ஷாக்கள்தான். டில்லி ஹாட், சாந்தனி சோவ்க், சரோஜினி நகர், பாலிக்கா பஸார், கோரல்பார் போன்ற பகுதிகளில் எந்நேரமும் வாகன நெரிசல் மிகுதியாகக் காணப்படும். கனரக வாகனங்கள் சில பகுதிகளுக்குள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் +(யிரிஸிu சைக்கிள் ரிக்ஷவையே பெருமளவு பயன்படுத்துகிறார்கள்.
உல்லாச பயணிகள் ரிக்ஷாவை ஆசைக்காக பயன்படுத்துகிறார்கள். ரிக்ஷாக்காரர்களிடம் பேரம் பேசி சவாரிக்காக அமர்த்திக் கொள்வது மொழிப் பிரச்சினை காரணமாக ரொம்பவும் சிரமப்பட்டாக வேண்டும்.
பாடசாலை மாணவர்கள் சுமார் 10 முதல் 15 பேர் வரை சைக்கிள் ரிக்ஷாவில் ஏறிச் செல்வதை பார்த்து ஆச்சரியமடைந்தோம். ஆனால் இவர்களை ஏற்றிச் செல்லும் போது ரிக்ஷாக்காரர் படும் அவஸ்தையை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருந்தது.
இந்திய தேசிய அருங்காட்சியகம்
புதுடில்லியிலுள்ள ஜன்பாத் மற்றும் மெளலானா ஆசாத் சாலையையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங் காட்சியகத்திற்கு எம்மை இலங்கையின் பிரதித் தூதுவர் பாலித்த கனேகொட அழைத்துச் சென்றார்.
இங்கே வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த பொருட்களிலிருந்து தற்கால கலைப் பொருட்கள் வரை உள்ளன. இது இந்தியாவின் மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.
இங்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
5000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட பண்பாட்டு மரபை விளக்குவதாக இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் பொருட்கள், படைக்கலங்கள், அழகூட்டற்கலைப் பொருட்கள், அணிகலன்கள், கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள், இந்திய கட்டடக்கலை, சிற்பக்கலை போன்றவையும் உள்ளன.
புதுடில்லியில் இந்திய தேசிய அருங்காட்சியகம் 1949 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரலாக விளங்கிய தமிழரும் எழுத்தாளருமான சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியார் (இராஜாஜி) இதைத் திறந்து வைத்தார்.
1955ம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி தேசிய அருங்காட்சியகத்திற்கான புதிய கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அன்று பிரதமராக இருந்த பண்டித் ஜவஹர் லால் நேரு அடிக்கல்லை நட்டுவைத்தார். (தொடரும்)

No comments:

Post a Comment